பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, பனங்கிழங்கு விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில், கரும்பு, பனங்கிழங்கு விற்பனை தொடங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள் என்ற சிறப்புக்குரியது பொங்கல் பண்டிகை. இதையொட்டி மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து வரும் நாட்களில் கிராம பகுதிகள் க

Update: 2016-12-22 22:45 GMT

திண்டுக்கல்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில், கரும்பு, பனங்கிழங்கு விற்பனை தொடங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாள் என்ற சிறப்புக்குரியது பொங்கல் பண்டிகை. இதையொட்டி மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து வரும் நாட்களில் கிராம பகுதிகள் களை கட்டும். பொங்கல் பண்டிகைக்கென கரும்பு, மஞ்சள் கிழங்கு விளைவிக்கப்படுவதும், இவற்றை தவிர்த்து பொங்கல் பண்டிகை கொண்டாட இயலாது என்பதும் இதன் சிறப்பு.

தமிழனின் கலாச்சார பண்டிகை என போற்றுதலுக்குரிய இந்த பண்டிகை வரும் முன்பே கரும்பு, பனங்கிழங்கு போன்றவை விற்பனைக்கு வந்து விடும். அதன்படி திண்டுக்கல் கோட்டைக்குளம் ரோடு, குமரன் பூங்கா அருகில் கரும்பு, பனங்கிழங்கு விற்பனை தொடங்கி உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு லாரி கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து கரும்பு, பனங்கிழங்கு வியாபாரிகள் கூறியதாவது;–

கரும்பு

திண்டுக்கல்லை அடுத்த கொசவபட்டி, சாணார்பட்டி, நத்தம், மேலூர் பகுதிகளில் இருந்து கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது ஒரு கட்டு கரும்பு ரூ.300–க்கு விற்பனை ஆகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரத்து அதிகரிக்கும். இருப்பினும் விலை குறைய வாய்ப்பில்லை. தேவை அதிகம் இருப்பதால் ரூ.300–ல் இருந்து கட்டுக்கு ரூ.100 என விலை உயர்ந்து ரூ.400–க்கு விற்பனை ஆகும் சூழ்நிலை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாள்தோறும் 5 லாரி அளவிற்கு கரும்பு விற்பனைக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் வரத்து குறைந்து போனது. மேலும் பணத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகளுக்கு மொத்தமாக பணத்தை கொடுத்து கரும்பு கொள்முதல் செய்ய முடியவில்லை. இதுபோன்ற பல்வேறு சிரமங்களுக்கு இடையே கரும்பு வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது.

பனங்கிழங்கு

இதேபோல் திண்டுக்கல்லுக்கு எரியோடு, கோவிலூர் மற்றும் மதுரையில் இருந்து பனங்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 1,000 பனங்கிழங்கு கொண்ட ஒரு மூட்டை ரூ.3,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அவற்றை சிறியது, பெரியது என தரம் பிரித்த பிறகு சில்லறை விற்பனையில் ஒரு பனங்கிழங்கு ரூ.4 முதல் ரூ.5 வரை விற்பனை செய்கிறோம்.

இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பனங்கிழங்கு வரத்தாகும். அதன்பிறகு வரத்து குறைந்து விடும். கடந்த வருடம் நாள்தோறும் 3 மூட்டை பனங்கிழங்கு விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்த வருடம் 2 நாட்களுக்கு ஒரு மூட்டை தான் விற்பனைக்கு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்