குண்டடத்தில், நள்ளிரவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம்–நகை கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
குண்டடத்தில் நள்ளிரவில் அரிசிமண்டி மற்றும் பூச்சி மருந்து கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.3½ லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– ப
குண்டடம்,
குண்டடத்தில் நள்ளிரவில் அரிசிமண்டி மற்றும் பூச்சி மருந்து கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.3½ லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பூச்சி மருந்துகடையில் கொள்ளைதிருப்பூர் மாவட்டம் குண்டடத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65). இவர் குண்டடம்–கோவை மெயின் ரோட்டில் போலீஸ் குடியிருப்பு எதிரே பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் சுப்பிரமணியனும், அவரது மனைவியும் வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சொந்த வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார். இதனால் நேற்று முன்தினம் சுப்பிரமணியனின் மனைவி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் மாலையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு கடையை ஒட்டியுள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையில் வெளியூர் சென்றிருந்த சுப்பிரமணியன் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் நேற்று காலை 6.30 மணி அளவில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே மேஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.3 லட்சம் மற்றும் 2 பவுன் மோதிரம், 50 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அரிசிமண்டியில் கொள்ளைஅதேபோல் குண்டடம் ருத்ராவதியை சேர்ந்தவர் விஜயகுமார் (50), இவர் குண்டடம்–கோவை ரோட்டில் பேரூராட்சி வணிக வளாகத்தில் அரிசிமண்டி வைத்து நடத்தி வருகிறார். மர்ம ஆசாமிகள் இவரது கடையின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடையின் மேஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
மேலும் சந்தைப்பேட்டை எதிரில் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வரும் கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன்(27) என்பவரது கடையின் பூட்டை உடைத்தும் உள்ளே சென்று மேஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. ஆனால் மேஜைமேல் இருந்த லேப்டாப்பை அவர்கள் எடுக்கவில்லை.
கொள்ளை போன நகை, மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணைஇந்த துணிகர கொள்ளை சம்பவங்கள் குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடைகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் சேகரித்துச் சென்றனர்.
குண்டடத்தில் ஒரே நாளில் நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது.