பட்டை நாமத்துடன் பிச்சை எடுத்து நூதன போராட்டம் பாசிக் ஊழியர்கள் 203 பேர் கைது

சம்பளம் வழங்கக்கோரி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாசிக் ஊழியர்கள் 203 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டை நாமத்துடன் போராட்டம் புதுச்சேரி பாசிக் அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி பல்வேறு கட்ட போ

Update: 2016-12-21 22:00 GMT

புதுச்சேரி,

சம்பளம் வழங்கக்கோரி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாசிக் ஊழியர்கள் 203 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டை நாமத்துடன் போராட்டம்

புதுச்சேரி பாசிக் அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 15–ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன்பிறகும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் பாசிக் தலைமை அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம், சுதேசி மில் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று ராஜீவ்காந்தி சிக்னல் அருகே பட்டை நாமம் அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் 200–க்கு மேற்பட்ட பாசிக் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பட்டை நாமம் அணிந்தபடி சிக்னல் அருகே பொதுமக்களிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

203 பேர் கைது

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பாசிக் நிறுவன ஊழியர்களான 44 பெண்கள் உள்பட 203 பேரை கைது செய்தனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஊர்வலமாக சென்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து மனு கொடுக்க உள்ளனர். நாளை (வெள்ளிக்கிழமை) ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்