பஸ் வசதி இல்லாத கிராமத்தில் மாணவர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கிராம மக்கள் பாராட்டு

பஸ் வசதி இல்லாத கிராமத்தில் மாணவர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கிராம மக்கள் பாராட்டு

Update: 2016-12-21 22:45 GMT
திசையன்விளை,

திசையன்விளை அருகே பஸ் வசதி இல்லாத கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்திற்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் ஆட்டோக்களில் அழைத்து வந்து பாடம் கற்பித்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பஸ்வசதி இல்லாத கிராமம்


நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மடத்தச்சம்பாடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் 1957–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளிக்கூடத்தில் முன்பு 8–ம் வகுப்பு வரை 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். காலப்போக்கில் கிராமங்களிலும் ஆங்கில வழிக்கல்வி மோகம் தொற்றிக் கொண்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கூடங்களில் சேர்க்க தொடங்கினர். இதனால் இந்த பள்ளிக்கூடத்தில் மாணவ–மாணவிகளின் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து, தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 87 ஆனது.

இந்த ஊருக்கு பஸ்வசதி கிடையாது. 350–க்கும் அதிகமான வீடுகள் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட திசையன்விளைக்கு 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து திசையன்விளைக்கு பஸ்வசதி உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள மாணவ–மாணவிகள் திசையன்விளையில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இலவச ஆட்டோ சேவை


ஆகையால் மேற்கண்ட பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர். அதன்படி பள்ளிக்கூடத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து, தங்களது பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்க்குமாறு வலியுறுத்தினர். தரமான கல்வி கற்பிப்பதுடன் கிராமத்தில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் வந்து செல்ல தங்களது சொந்த செலவில் காலை, மாலை என இரு வேளைகளிலும் இலவசமாக ஆட்டோ ஏற்பாடு செய்து தருவதாகவும், ஆட்டோவில் ஆசிரியர்களே வீடு வீடாக வந்து அழைத்துச் சென்று மாலையில் ஆசிரியர்களே வீட்டில் வந்து மாணவர்களை இறக்கி விடுவதாகவும் உறுதியளித்தனர்.

ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று மருதநாச்சிவிளை, முருகேசபுரம், நாடார் அச்சம்பாடு, ஜோதிநகரம், தச்சன்விளை ஆகிய கிராமங்களில் இருந்து 34 மாணவ–மாணவிகள் இந்த பள்ளிக்கூடத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆசிரியர்களே ஆட்டோவில் அழைத்து வந்து மாலையில் ஆட்டோவில் வீட்டில் சென்று இறக்கிவிடுகிறார்கள். அதன் பயனாக இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் தங்கசாமி தெரிவித்தார். வரும் ஆண்டுகளிலும் இந்த இலவச ஆட்டோ சேவையை தொடர உள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பஸ் வசதி வேண்டும்


மேலும் பஸ்வசதி இல்லாத இந்த ஊருக்கு பஸ்வசதி செய்து தர வேண்டும் எனவும் இக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்