பண பிரச்சினையை கண்டித்து ஏ.டி.எம்.கள் முன் ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன் அறிக்கை

பண பிரச்சினையை கண்டித்து ஏ.டி.எம்.கள் முன் ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன் அறிக்கை

Update: 2016-12-21 21:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் எழுந்துள்ள பண பிரச்சினையை கண்டித்து ஏ.டி.எம்.கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மோதல்

மத்திய அரசின் அதிரடி திட்டமான 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லத்தக்கதல்ல என்ற அறிவிப்பு இந்தியாவில் கோடிக்கணக்கான ஏழை நடுத்தர மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள யுத்தமாக மாறியுள்ளது.

மத்திய அரசு எந்தவித முன்னேற் பாடும் இல்லாமல் இத்திட்டத்தை அறிவித்தது மட்டுமல்ல, தினமும் குறைந்தது 10 அறிவிப்புகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்து வருகிறது. இவ் அறிவிப்பால் கள்ள பணம் வைத்துள்ளவர்கள் சுகமாக உலவுகின்றனர். கோடிக்கணக்கான ஏழைகள் வங்கி முன்பும், ஏ.டி.எம். முன்பும் மணிக்கணக்கில் காத்து நின்று பணம் கிடைக்காமல் வெறும் கையுடன் வீடு திரும்புகின்றனர்.

வியாபாரம் பாதிப்பு

இதனால் வங்கி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.

குமரி மாவட்டம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடும் பழக்கமுள்ளமாவட்டம். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்கள் வங்கி பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் திக்கு முக்காடுகின்றனர். மக்களிடம் பணம் இல்லாமையால் வியாபாரம் படுத்துவிட்டது. குறிப்பாக மாவட்டமே தொழில் இல்லாமல், வியாபாரம் இல்லாமல், விவசாயம் இல்லாமல் வேகமாக அழிவை நோக்கி செல்கிறது. ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மாறாக தினம், தினம் மக்கள் தலையில் குண்டு மழை பொழியும் அறிவிப்பை மட்டும் செலுத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

எனவே மத்திய அரசின் மக்கள் விரோதச்செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத்தில் 100 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியுள்ளது. அதுபோன்று வங்கிகள் முன்பு தர்ணா போன்ற போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ஏ.டி.எம். முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்