புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் பஞ்சகமூர்த்தி வீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் பஞ்சகமூர்த்தி வீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2016-12-21 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாதசுவாமி கோவிலில் நேற்று பஞ்சகமூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

படி அரிசி வழங்கி வழிபாடு

புதுக்கோட்டையில் சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. புதுக்கோட்டை திருக்கோவில்களை சேர்ந்த இந்த கோவிலில் நேற்று மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு 18-ம் ஆண்டு படி அளக்கும் நிகழ்ச்சி மற்றும் பஞ்சகமுர்த்தி வீதிஉலா நகரத்தார் சார்பில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாந்தநாத சுவாமி கோவிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி, வேதநாயகி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் படி அரிசி வழங்கி வழிபாடு செய்தனர்.

பஞ்சகமூர்த்தி வீதிஉலா

இதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி, வேதநாயகி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பஞ்சக மூர்த்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியரை மயில் வாகனத்திலும், வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமியை ரிஷப வாகனத்திலும், வேதநாயகி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சுவாமி ரிஷப வாகனத்திலும் எழுந்தருள செய்தனர்.

இதைத்தொடர்ந்து பஞ்சகமூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. இந்த வீதிஉலா பெரிய கடை வீதி மேலராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்