விவசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு

விவசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு;

Update: 2016-12-21 22:45 GMT
புதுக்கோட்டை,

விவசாயியை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

விவசாயி வெட்டி கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வடக்கு மஞ்சக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்பபிச்சை (60) என்பவருக்கும் இடையே விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 19.11.2012-ந் தேதி நள்ளிரவு சுப்பிரமணியன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.

அப்போது அங்கு வந்த குப்பபிச்சைக்கும், சுப்பிமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குப்பபிச்சை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுப்பிரமணியனின் தலையில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து குப்பபிச்சை தப்பி ஓடி விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சுப்பிரமணியனின் மனைவி வெள்ளையம்மாள் ஜெகதாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார்.

முதியவருக்கு ஆயுள் தண்டனை

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குப்பபிச்சையை கைது செய்தனர். மேலும் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக குப்பபிச்சைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக தர்மராஜ் ஆஜரானர்.

மேலும் செய்திகள்