ஓசூரில், போலீஸ் அதிகாரியை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

ஓசூரில், போலீஸ் அதிகாரியை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

Update: 2016-12-21 22:45 GMT
ஓசூர்,

ஓசூரில், போலீஸ் அதிகாரியை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் வக்கீல் ரமேஷ் சிவில் வழக்கு தொடர்பாக ஆஜர் ஆகி வந்ததாகவும், அவர் தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க சென்ற வக்கீல்களை ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் அவமதித்ததாக கூறி இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓசூர் வக்கீல்கள் சங்க அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் விஜயன், துணை தலைவர்கள் சக்கரத்தார், வனிதா, இணை செயலாளர் சம்புராஜ், நூலகர் ஞானசேகர் மற்றும் மூத்த வக்கீல்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதில், வக்கீல் ரமேஷ் தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க சென்ற ஓசூர் வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த வக்கீல்களை அவமதித்த ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதனுக்கு கண்டனம் தெரிவிப்பது. வழக்கறிஞர்களுக்கு காவல் துறை அதிகாரிகள் உரிய மரியாதை அளித்திட வேண்டும். வக்கீல்களை அவமதித்த உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கோவை ஐ.ஜி., மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோரை சந்தித்து மனு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஓசூர் வக்கீல் சங்க தலைவர் சிவசங்கர்,செயலாளர் கதிரவன் ஆகியோர் கூறியதாவது:-

நீதிபதியிடம் மனு

பாகலூர் அருகே உள்ள வெங்கடாயபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் ஓசூரில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். நிலம் தொடர்பான புகார் ஒன்றை ரமேஷ் பாகலூர் போலீசில் கொடுத்துள்ளார். இந்த நிலையில் வக்கீல் ரமேஷ் தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக புகார் கொடுப்பதற்காக ஓசூர் வக்கீல் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள், உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு வக்கீல்களை அவமதிக்கும் விதமாக உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் நடந்து கொண்டார்.

இதை கண்டித்து நாங்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் அதிகாரிகளிடமும், மாவட்ட நீதிபதியிடமும் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்