வங்கி முன்பு பணம் எடுக்க காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு
கீழக்கரை வங்கி முன்பு நீண்ட வரிசையில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பணத்தட்டுப்பாடு மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்க
ராமநாதபுரம்
கீழக்கரை வங்கி முன்பு நீண்ட வரிசையில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பணத்தட்டுப்பாடுமத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் சொந்தப்பணத்தை எடுப்பதற்கே, வங்கிகளின் வாசலிலும், மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் தவம் கிடக்கிறார்கள்.
50 நாளில் பிரச்சினை தீரும் என்று மத்திய அரசு சமாதானம் சொன்னாலும், நேற்றோடு 43 நாட்கள் கடந்தும் நிலைமை சீரடைய வில்லை. மாறாக நாளுக்கு நாள் பணத்தட்டுப்பாடு அதிகரித்து மக்களின் துயரம் கூடிக்கொண்டே போகிறது.
தினமும் காலை விடிந்ததும் வங்கிகளை நோக்கி ஓடுவதே மக்களின் பிழைப்பாகி விட்டது. அங்கு வரிசையில் நின்று பணம் எடுக்கும்போதும், காத்திருக்கும்போதும் மனஉளைச்சலாலும், உடல் உபாதைகளாலும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர்.
நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வங்கியில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சோக சம்பவம் நடந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:–
67 வயதுராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் முகமது நைனார். இருடைய மகன் சித்திக்அலி(வயது 67). இவர் நேற்று காலை கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்தார். நீண்ட வரிசையை பார்த்தவுடன் சித்திக்அலிக்கு இதில் கடந்து சென்று எப்போது பணம் எடுக்கப் போகிறோம் என்ற கவலை ஏற்பட்டது.
இருப்பினும் பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் வேறு வழியின்றி வரிசையில் நின்றார். சிறிதுநேரத்தில் சித்திக்அலிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அதையும் சமாளித்து நின்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் பதற்றமடைந்து அவருக்கு தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.
ஆனால், அவருடைய உடலில் எந்த அசைவும் இல்லை. எனவே அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சித்திக்அலி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதபடி அவருடைய உடலை பெற்றுச்சென்றனர்.
ஏ.டி.எம்.மில் பணம் வைப்பதில்லைராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்கப்படுவதே இல்லை. ஒரு சில வங்கிகள் மட்டும் தங்களின் தலைமை அலுவலக வளாக வாசலில் உள்ள மையத்தில் பணம் வைக்கின்றன. இதர இடங்களில் உள்ள மையங்களில் ஒருநாள் கூட பணம் வைப்பதில்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட ஓரிரு நாட்கள் பணம் வைக்கின்றன. ஆனால் தனியார் வங்கிகள் தங்களின் எந்த ஏ.டி.எம். மையங்களிலும் பணம் வைக்கவே இல்லை. வங்கியில் சென்று பணம் கேட்டாலும் பணம் வரவில்லை என்று பதில் அளிக்கின்றனர்.
மதுரையில் ‘ஒப்பாரி‘மதுரையில் ஒன்றிரண்டு ஏ.டி.எம். மையங்களில் மட்டுமே பணம் வைக்கப்படுகிறது. அதுவும் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது.
இதனால் ஏ.டி.எம். மையங்களின் மீது மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
மதுரை ஞானஒளிவுபுரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவை மூடியே கிடக்கின்றன. இதனால் கோபம் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று அவற்றின் முன் மவுன அஞ்சலி போராட்டம் நடத்தினர். ஏ.டி.எம். மையங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெண்கள் அங்கு உட்கார்ந்து ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.