ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடியை சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடியை சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். பாம்பன் மீனவர்கள் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் சுமார் 60 விசைப் படகுகளில் 300–க்கும் மேற்பட்ட மீன

Update: 2016-12-21 22:30 GMT

ராமேசுவரம்

ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடியை சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.

பாம்பன் மீனவர்கள்

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் சுமார் 60 விசைப் படகுகளில் 300–க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பனை சேர்ந்த கிறிஸ்டி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் கிறிஸ்டி, மலையாண்டி, ரீகன், பாண்டி, சேதுபிச்சை ஆகிய 5 மீனவர்களையும் ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

பின்னர் 5 மீனவர்களும் மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

தூத்துக்குடி

இதேபோல் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் காலை செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு நாட்டுப்படகில் விக்டர், அஜித், அமலன், வினோத், வெற்றிவேல், பிரவின், லியோன் ஆகிய 7 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்று நள்ளிரவில் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த நாட்டுப்படகையும், அதில் இருந்த 7 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்து அதே கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

கடற்படை முகாமில் 12 மீனவர்களிடமும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்து இருப்பதாக, பாம்பனில் உள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் நேற்று பிற்பகலில்தெரிவித்தார்.

ராமேசுவரம்

இந்தநிலையில் ராமேசுவரத்தை சேர்ந்த மேலும் 17 மீனவர்களும் சிறைபிடித்துச்செல்லப்பட்ட தகவல் நேற்று மாலை வெளியானது.

இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியதாவது:–

வருகிற ஜனவரி மாதம் 2–ந்தேதி, இந்திய–இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாம்பன், தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் பிடித்துச்செல்லப்பட்டதாக காலையில் தகவல் கிடைத்தது. மாலையில் மேலும் 17 மீனவர்களை சிறைபிடித்துச்சென்ற தகவல் கிடைத்து இருக்கிறது.

இவர்கள் எல்லை தாண்டிவந்ததாக சிறைபிடிக்கப்பட்டு காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2 தினங்களில் கோட்டைப்பட்டினம் (7), பாம்பன் (5), தூத்துக்குடி (7), ராமேசுவரம் (17) மீனவர்கள் 36 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். தொடர் கதையாகி வரும் இந்த சிறைபிடிப்பை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது.

போராட்டம்

மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 6 மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி ராமேசுவரத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக 6 மாவட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்