மது அருந்துவதற்காக வெள்ளி அரைஞாண் கயிற்றை திருடி 4–வயது சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மதுஅருந்துவதற்காக வெள்ளி அரைஞாண் கயிற்றை திருடி 4–வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. விவசாயி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி ராமாநாதபுரத்தை சேர்ந்த விவசாயி வைத

Update: 2016-12-21 22:15 GMT

கடலூர்

மதுஅருந்துவதற்காக வெள்ளி அரைஞாண் கயிற்றை திருடி 4–வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

விவசாயி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி ராமாநாதபுரத்தை சேர்ந்த விவசாயி வைத்தியலிங்கம்(வயது 35). இவருக்கு ராஜலட்சுமி(30) என்ற மனைவியும், பிரதீபா(6) என்ற மகளும் ஆகாஷ்வர்மா(4) என்ற மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று ஆகாஷ்வர்மாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவனது பெற்றோர் புத்தாடையும், இனிப்பும் வாங்கிக்கொடுத்தனர். பின்னர் மாலையில் அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆகாஷ் வர்மாவை அதே பகுதியை சேர்ந்த ஆதிகேசவபெருமாள்(வயது 32) என்பவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுவன் இடிப்பில் கட்டியிருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை திருடினார். இதைப்பார்த்து ஆகாஷ் வர்மா சத்தம்போட்டான்.

கழுத்தை நெரித்து கொலை

இதில் ஆத்திரம் அடைந்த ஆதிகேசவபெருமாள் திருடிய அரைஞாண் கயிற்றால் சிறுவனின் கழுத்தை நெரித்தான். இதனால் சிறுவன் துடி துடித்தபடி மயங்கி விழுந்தான். பின்னர் ஆகாஷ்வர்மாவை தர தரவென இழுத்துச்சென்று வீட்டுக்குள் இருந்த வெள்ளி குவளையில் வைத்து மூடி வைத்துவிட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல சென்று விட்டார்.

இந்த நிலையில் சிறுவன் ஆகாஷ் வர்மான திடீரென காணாமல் போனதை அறிந்த பெற்றோர் அவனை தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் மகனை காணவில்லை.

கிராமமக்கள் தேடினர்

பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது ஆகாஷ்வர்மாவை ஆதிகேசவபெருமாள் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கே ஆதிகேசபெருமாளை காணவில்லை. ஆனால் ஆகாஷ்வர்மா அணிந்திருந்த சிவப்பு நிற சட்டையும், அறுந்தநிலையில் அரைஞாண் கயிறும் தரையில் கிடந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் சிறுவன் ஆகாஷ்வர்மாவை ஆதிகேசவபெருமாள் அவரது வீட்டுக்குள் அழைத்து வந்தது உறுதியானது. ஆனால் சிறுவனுடன் அவர் எங்கே சென்றார்? என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து ஆதிகேசவபெருமாளை கிராம மக்கள் தேடினர். அப்போது ஆலடி பிள்ளையார்கோவில் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது.

சில்வர் குவளையில்

இதைடுத்து கிராமத்து மக்கள் அனைவரும் அங்கே விரைந்து சென்று ஆதிகேசவபெருமாளை பிடித்து விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். பின்னர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்போது சிறுவன் ஆகாஷ்வர்மாவை அடித்து கழுத்தை நெரித்து வீட்டில் உள்ள சில்வர் குவளையில் வைத்து மூடி வைத்திரப்பதாகவும், சிறுவனிடம் திருடிய அறைஞாண் கயிறை கொண்டு மது குடித்ததாகவும் தெரிவித்தார்.

அதன் பேரில் ஆதிகேசவபெருமாளின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கே சில்வர் குவளையில் ஆகாஷ்வர்மா மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். பின்னர் அவனை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு அவனது உடலை பரிசோதனை செய்த டாக்டர் ஆகாஷ்வர்மா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிறந்தநாளிலேயே மரணம் அடைந்த மகனின் உடலை பார்த்து பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் கடந்த 7–5–2016 அன்று நடந்தது.

ஆயுள்தண்டனை

இது குறித்து வைத்திலியங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிகேசவபெருமாளை கைது செய்து அவர் மீது கடலுர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆதிகேசவபெருமாளுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பவானி ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்