திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவில்வழியில் பஸ் நிலையம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவில்வழியில் பஸ் நிலையம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கோவில்வழியில் பஸ் நிலையம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் மேம்பாலம் அமைக்கும் பணிக

Update: 2016-12-21 22:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவில்வழியில் பஸ் நிலையம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

கோவில்வழியில் பஸ் நிலையம்

திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரமாண்ட தூண்கள் மற்றும் பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருவதால் மாநகரின் மையப்பகுதியான பழைய பஸ் நிலையம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு மார்க்கமாக மாநகருக்கு வரும் பஸ்களை தாராபுரம் ரோடு கோவில்வழியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைத்து அங்கு பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனால் பழைய பஸ் நிலைய பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் இந்த ஏற்பாட்டை செய்து வருகிறார்கள்.

கருத்து கேட்பு கூட்டம்

இந்தநிலையில் கோவில்வழியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் உதவி கலெக்டர் ஷ்ரவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள், மினி பஸ் உரிமையாளர்கள், நுகர்வோர் அமைப்பினர், வர்த்தக அமைப்பினர், கோவில்வழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற ஒருதரப்பினர் கூறும்போது, ‘கோவில்வழி பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதால் மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும். தென்மாவட்டத்தை சேர்ந்த பஸ்கள் புதிய பஸ் நிலையம் வரை செல்வதால் எரிபொருள் அதிகம் செலவாகிறது. கோவில்வழியில் அமைய உள்ள பஸ் நிலையம் வரை தென்மாவட்ட பஸ்களை இயக்குவதால் எரிபொருள் மிச்சமாகும். நாளொன்றுக்கு சுமார் 300 நடைகள் புறநகர் பஸ் போக்குவரத்து உள்ளது. கோவில்வழியில் பஸ் நிலையம் அமைக்கும் போது மாநகருக்குள் அந்த பஸ்கள் வருவது குறையும்’ என்றனர்.

கலெக்டரிடம் தெரிவிக்கப்படும்

மற்றொரு தரப்பினர் பேசும்போது, ‘கோவில்வழியில் பஸ் நிலையம் அமைத்தாலும், அங்கிருந்து மாநகருக்கு வருவதற்கு டவுன் பஸ்களை கண்டிப்பாக இயக்க வேண்டும். அதனால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவில்வழியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டாம்’ என்றனர்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி கூறும்போது, ‘இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். அதன்பிறகு கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட கூட்டம் நடத்தப்பட்டு அதன்பிறகு முடிவு செய்யப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்