திண்டுக்கல், தேனியில் கொள்ளைபோன ரூ.4¼ கோடி மதிப்பிலான நகை–பணம் மீட்பு போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் பேட்டி
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொள்ளைபோன ரூ.4¼ கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மீட்டு இருப்பதாக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தெரிவித்தார். திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ‘தினத்தந்தி’க்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்
திண்டுக்கல்
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொள்ளைபோன ரூ.4¼ கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மீட்டு இருப்பதாக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தெரிவித்தார்.
திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ‘தினத்தந்தி’க்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:–
மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்?கேள்வி:– கேரளாவில் இருந்து தப்பிய மாவோயிஸ்டுகள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை போன்ற வனப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:– தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் எங்கும் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கவில்லை. அவர்களின் அச்சுறுத்தல் தற்போது அறவே இல்லை. இனியும் அதற்கான வாய்ப்புகள் ஏற்படாது. ஏனென்றால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தனித்தனியாக நக்சல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு, அந்த பிரிவில் இருக்கும் போலீசார் வனப்பகுதிகளில் தீவிர ரோந்து சென்று வருகிறார்கள். இதேபோல, கியூ பிரிவு போலீசாரும் ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.
கேள்வி:– கொடைக்கானலில் கடந்த 2008–ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?
பதில்:– மாவோயிஸ்டுகள் ரஞ்சித், நீலமேகம், கண்ணன் என்ற செந்தில், ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோர் ஏற்கனவே சிக்கி உள்ளனர். மதுரை மற்றும் நாமக்கல்லை சேர்ந்த மாவோயிஸ்டுகள் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை விரைவில் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்.
குற்ற வழக்குகள்கேள்வி:– இந்த ஆண்டு எத்தனை குற்ற வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டு உள்ளது?
பதில்:– திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, நகை பறிப்பு, கொள்ளை என மொத்தம் 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் இழக்கப்பட்ட நகைகள், பொருட்கள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 2 லட்சத்து 62 ஆயிரத்து 817 ஆகும். இதுவரை 326 வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சத்து 51 ஆயிரத்து 237 மதிப்பிலான பொருட்கள், பணத்தை மீட்டு உள்ளோம்.
தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 335 வழக்குகளில், 262 வழக்குகளை முடித்துவிட்டோம். இழக்கப்பட்ட ரூ.1 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரத்து 529 மதிப்பிலான பொருட்கள், பணத்தில் ரூ.73 லட்சத்து 24 ஆயிரத்து 255 மதிப்பிலானவை மீட்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டில் எஞ்சி இருக்கும் நாட்களுக்குள் 100 சதவீதம் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போதை காளான்கேள்வி:– கொடைக்கானலில் போதை காளான், கஞ்சா போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:– அங்கு போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக ‘மேஜிக் மஸ்ரூம்’ எனப்படும் போதை காளான் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வட்டக்கானல் பகுதியில் வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்குவதாகவும், அங்கு போதை காளான் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும் வந்த தவலை தொடர்ந்து, வட்டக்கானல் செல்லும் பாதையில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, அங்கு நிரந்தர சோதனை சாவடி அமைக்க உத்தரவிட்டு உள்ளேன்.
மேலும், மன்னவனூர் வனப்பகுதியில்தான் அதிகளவு போதை காளான் விளைவதாக கூறப்படுகிறது. அங்கு அத்துமீறி நுழைபவர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினரின் உதவியையும் நாடி உள்ளோம். போதை பொருட்கள் விற்ற சிலரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளோம்.
கேள்வி:– ‘வாட்ஸ்அப்’, ‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களில் அடிக்கடி வதந்திகள் பரப்பப்படுகின்றதே?
பதில்:– சைபர் கிரைம் போலீசார் மூலம் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்புவோரை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் வழக்குகளை சந்திக்க நேரிடும்.
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்கேள்வி:– சமீப காலமாக குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன? இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
பதில்:– சினிமாவில் சித்தரிக்கப்படும் காட்சிகள் சமூகத்தை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக, சில திரைப்படங்களில் இடம்பெறும் நடைமுறையில் சாத்தியமற்ற காதல் காட்சிகள் குழந்தைகள், இளம்பெண்கள், இளைஞர்களை கெடுப்பதாக இருக்கிறது. குழந்தைகள், இளம்பெண்களின் செயல்பாடுகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கும் பெற்றோர் அறிவுரைகள் வழங்க வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர் எப்போதும் நெருக்கமாக இருக்க வேண்டும். இதே போல, சமூக வளைத்தலங்களை பயன்படுத்தும்போது அதீத கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும்.
போலீஸ் தரப்பில், பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய வழக்குகள் எதுவுமின்றி, பாலியல் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஒரு பாதிரியாரையும், பழனியில் ஒரு நபரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளோம்.
நவீன கட்டுப்பாட்டு அறைகேள்வி:– குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்?
பதில்:– திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 52 பேரும், தேனி மாவட்டத்தில் 25 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேள்வி:– தேனியில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுமா?
பதில்:– திண்டுக்கல் மாவட்டம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ‘மாஸ்டர்’ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதையும் கேமராக்கள் வழியாக ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இது விபத்துகளை தடுக்கவும், குற்றங்களை குறைக்கவும் அமைக்கப்பட்டு உள்ளது. இதே போல, தேனியிலும் ‘மாஸ்டர்’ கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் கூறினார்.