புதுவை போலீஸ்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது

புதுவை போலீஸ்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை லாஸ்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீஸ்காரர் கொலை புதுவை போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் அருணகிரி. இவர் கடந்த ஜனவரி மாதம் மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி நெய்ரோஜா;

Update: 2016-12-20 22:19 GMT

புதுச்சேரி,

புதுவை போலீஸ்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை லாஸ்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீஸ்காரர் கொலை

புதுவை போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் அருணகிரி. இவர் கடந்த ஜனவரி மாதம் மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி நெய்ரோஜா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பான விசாரணையில் 11 மாதங்களுக்குப் பின் துப்புதுலங்கியது.

அருணகிரியை அவரது மனைவியின் சகோதரி கணவர் (சகலை) சிவானந்தம் ராபர்ட் மற்றும் கடலூரைச் சேர்ந்த முத்துராஜ் உள்பட 5 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்து சாம்பலை கடலில் கரைத்தது தெரியவந்தது.

கள்ளத்தொடர்பு சந்தேகம்

இதனைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் சிவானந்தம் ராபர்ட், முத்துராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். போலீசில் சிவானந்தம் ராபர்ட் அளித்த வாக்குமூலத்தில், அருணகிரியின் மனைவி நெய்ரோஜாவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அருணகிரி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இதுதொடர்பாக கேட்டு தன்னை அடித்து அவமானப்படுத்தியதால் அருணகிரியை மது குடிக்க வைத்து பாட்டிலால் அடித்து கொலை செய்து கூட்டாளிகளுடன் சேர்ந்து உடலை எரித்து சாம்பலை கடலில் கரைத்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

3 பேர் கைது

பரபரப்பான இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கடலூரைச் சேர்ந்த சதீஷ்குமார், வெங்கட், கருணாஜோதி ஆகிய 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த 3 பேரும் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கடலூரைச் சேர்ந்த சதீஷ்குமார், வெங்கட், கருணாஜோதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்