திருவெறும்பூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து சம்பவம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் தங்க நகை கொள்ளை கோவிலிலும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

திருவெறும்பூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து சம்பவம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் தங்க நகை கொள்ளை கோவிலிலும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

Update: 2016-12-20 23:00 GMT
திருவெறும்பூர்,

திருவெறும்பூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

தனியார் நிறுவன ஊழியர்

திருவெறும்பூர் மலைக் கோவில் இந்திராநகர் முல்லைதெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(வயது33) . இவர் மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோருடன் வசித்து வருகிறார். சாந்தி வீட்டின் கீழ் தளத்திலும் மற்றவர்கள் மேல் தளத்திலும் உள்ளனர். இரவு நேரம் மட்டும் சாந்தி மாடியில் உள்ள மாமியார் வீட்டில் படுத்துக்கொள்வது வழக்கம்.

10 பவுன் நகை கொள்ளை

வழக்கம் போல நேற்றுமுன்தினம் இரவு சாந்தி வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்க சென்றார். பின்னர் நேற்றுகாலை எழுந்து வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் கொள்ளைபோனது. வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த அவரது மொபட்டையும் கொள்ளையர்கள் எடுத்துசென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சாந்தியின் மொபட் அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. பெட்ரோல் இல்லாததால் கொள்ளையர்கள் விட்டுசென்றுள்ளனர். விரல் ரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

கோவிலில் கைவரிசை

இதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து உள்ளனர். அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி பூட்டு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அங்கு சோதனையிட்டனர். ஆனால் உண்டியலில் இருந்த பணம் கொள்ளை போகவில்லை என தெரிய வந்தது.

இதே போன்று திருவெறும்பூர் கூத்தைப்பார் ரோட்டை சேர்ந்த செல்வம் தனது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த அவருக்கு சொந்தமான பொக்ளின் எந்திரமும் மாயமானது. திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து பொக்ளின் எந்திரத்தை தேடி வருகின்றனர்.

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்