தேசிய மொழி இந்தி இல்லை, சமஸ்கிருத மொழியாக இருக்கலாம்..! - நடிகை கங்கனா ரனாவத் புது ஐடியா

தமிழ், கன்னடம், இந்தியைவிட பழமையானது சமஸ்கிருதம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.;

Update:2022-04-30 10:39 IST
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகா திரையுலக நடிகர் கிச்சா சுதீப் இந்தி தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார். அதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு பதில் பதிவை செய்திருந்தார். அதில் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்ற கருத்தை அஜய் தேவ்கன் பதிவு செய்திருந்தார். அதற்கு பலரும் தங்களுடைய விமர்சனத்தை பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்று தன்னுடைய  “தாகத்” திரைப்படத்தின் டிரையலரை வெளியிட்டார். அந்த விழாவில் பேசிய அவர், “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தி தேசிய மொழி தான். ஆகவே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழி நம்முடைய தேசிய மொழி என்று தெரிவித்த கருத்தில் எந்தவித தவறும் இல்லை. இந்தியை தேசிய மொழியாக ஏற்க மறுப்பது அரசியலமைப்பை மறுப்பதை போன்றது.

மொழி வாரியாக வேற்றுமை கொண்டுள்ளது இந்தியா. எல்லோரையும் ஒற்றை புள்ளியில் இணைக்க பொதுவான மொழி ஒன்று தேவை. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் இந்தியை விட தமிழ் பழமையானது. ஆனால் சமஸ்கிருதம் அதனை காட்டிலும் தொன்மையானது.

கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி போன்ற மொழிகளை விட சமஸ்கிருதம் பழமையானது. இந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்திருக்கலாம். பின்னர் ஏன் நமது நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க கூடாது..? தேசிய மொழி எது என்று என்னைக் கேட்டால், அது இந்தி இல்லை, சமஸ்கிருத மொழியாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பெருமை கொள்ள பிறப்புரிமை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்