நடிகை சோனம் கபூரின் வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை

நடிகை சோனம் கபூரின் வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போயுள்ளது.

Update: 2022-04-09 09:36 GMT



புதுடெல்லி,



இந்தி திரையுலகில் பிரபல நடிகை சோனம் கபூர்.  பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜா.  திருமணம் முடிந்தபின், இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர்.  கர்ப்பிணியாக உள்ள இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால போராட்டம் பற்றியும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.  தனது கணவருடன் உள்ள புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 11ந்தேதி இவர்களது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது.  சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ந்தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் இன்று வெளியிட்டுள்ள ஊடக செய்தியில், டெல்லியில் உள்ள அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் ஹரீஷ் அகுஜாவின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி நடப்பு 2022ம் ஆண்டு, பிப்ரவரி 23ந்தேதி புகார் அளிக்கப்பட்டது.

புகாரில், வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கடந்த பிப்ரவரி 11ந்தேதியே அவர்கள் அதனை கவனித்து உள்ளனர்.

ஆனால், புகாரை 22ந்தேதியே அளித்துள்ளனர்.  உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.  குழுக்கள் அமைக்கப்பட்டு சாட்சிகள் விசாரணை, அடுத்த கட்ட விசாரணை என தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு, சோனம் கபூரின் மாமனரான ஹரீஷ் அகுஜாவிடம் மோசடி கும்பல் ஒன்று ரூ.27 கோடி மோசடி செய்திருந்தது.  இதுபற்றி கடந்த ஆண்டு ஜூலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

சைபர் மோசடி வழியே நடந்த இந்த கொள்ளையில் தொடர்புடைய, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கர்நாடகா என நாடு முழுவதிலும் இருந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவலை போலீசார் கடந்த மார்ச்சில் வெளியிட்டனர்.  இந்த நிலையில், நடிகை சோனம் கபூரின் வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்