தமிழர்களுக்கும் திரையுலகினருக்கும் விருதை காணிக்கையாக்குகிறேன் கவிஞர் வைரமுத்து பேட்டி

தமிழர்களுக்கும் திரையுலகினருக்கும் விருதை காணிக்கையாக்குகிறேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Update: 2017-05-04 15:39 GMT
சென்னை,

கடந்த ஆண்டுக்கான 64–வது தேசிய திரைப்பட விருதுகளுக்காக, 344 திரைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பிரபல இயக்குனர் பிரியதர்‌ஷன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுத்து கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், இந்த விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கினார். மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, மத்திய இணை மந்திரி ராஜ்யவர்த்தன் ரத்தோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டெல்லியில், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர்கள் மோகன்லால், அக்‌ஷய் குமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விருது பெற்றனர். இயக்குனர் கே.விஸ்வநாத், தாதாசாகேப் பால்கே விருது பெற்றார்.

இந்நிலையில் தேசிய விருது பெற்று சென்னை திரும்பிய பின்னர் கவிஞர் வைரமுத்து செய்தியார்களிடம் கூறியதாவது:

7-வது முறையாக தேசிய விருது பெற்றது பெருமைக்குரியது தான். பெருமையும் சாதனையும் மொழிக்கான முதல் உரிமையே தவிர பாடலாசிரியருக்குரியது அல்ல. எந்தவொரு இசையையும் வளைத்துக்கொள்ளும் ஆற்றல் தமிழுக்கு இருக்கிறது. தமிழர்களுக்கும் திரையுலகினருக்கும் விருதை காணிக்கையாக்குகிறேன். கலைத்துறை நலிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்