பட்ஜெட் 2020 ; ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை ?

பயணிகள் ரெயில் கட்டணம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி உயர்த்தப்பட்டதால், இன்று ரெயில் கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2020-02-01 03:30 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நெருக்கடியான கால கட்டத்தில் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். இது அவர் தாக்கல் செய்கிற இரண்டாவது பட்ஜெட் ஆகும். 

இப்போது ரெயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனவே ரெயில் கட்டண உயர்வு இருக்காது. புதிய ரெயில்கள், புதிய வழித்தடங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ரெயில்வே தனியார்மயம்  பற்றிய அறிவிப்புகள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. 

2024- ஆம் ஆண்டுக்குள் அனைத்து வழித்தடங்களையும் மின்சாரமயமாக்க  ரெயில்வே திட்டமிட்டுள்ளதால், இதற்கான திட்டமிடல் பற்றிய அறிவிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கடந்த வாரம்  டெல்லியில் நடந்த இந்திய மற்றும் பிரேசில் நாடுகளின் வர்த்தக மன்றத்தில்  பேசிய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ”நாட்டில் வருகிற 2024ம் ஆண்டிற்குள் ரயில்வே துறை 100 சதவீதம் அளவிற்கு மின்மயம் ஆக்கப்படும்.இதனால் உலகிலேயே 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கக்கூடிய மிகப்பெரிய முதல் ரயில்வே துறையாக இந்திய ரயில்வே இருக்கும்” என்றார். 

மேலும் செய்திகள்