2019 மார்ச் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில் 30 வினியோகஸ்தர்களின் பங்கு 25 சதவீதம்
2019 மார்ச் இறுதி நிலவரப்படி, பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில் 30 முன்னணி வினியோகஸ்தர்களின் பங்கு 25 சதவீதமாக இருக்கிறது.;
புதுடெல்லி
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.
இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு இறங்குகிறது.
ரூ.1.10 லட்சம் கோடி
கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில், பரஸ்பர நிதி துறையின் பல்வேறு திட்டங்களில் நிகர அடிப்படையில் ரூ.1.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) அது ரூ.2.72 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, முதலீடு சுமார் 60 சதவீதம் குறைந்து இருக்கிறது. கடன் சந்தை திட்டங்களில் அதிக முதலீடு வெளியேறியதே இதற்குக் காரணமாகும்.
எனினும் சென்ற நிதி ஆண்டில் இத்துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 1.11 கோடி உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது புதிய சாதனை அளவாக கருதப்படுகிறது.
இந்நிலையில், கடந்த நிதி ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் 30 பெரிய வினியோகஸ்தர்களின் பங்கு மட்டும் 25 சதவீதமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் வங்கிகள்தான் அதிகபட்ச பங்கினைக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக எச்.டீ.எப்.சி. வங்கியே மிகப்பெரிய வினியோகஸ்தராக உள்ளது.
எச்.டீ.எப்.சி. வங்கி
2019 மார்ச் இறுதி நிலவரப்படி எச்.டீ.எப்.சி. வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.72,944 கோடியாகும். அடுத்து பாரத ஸ்டேட் வங்கி ரூ.64,280 கோடியை நிர்வகிக்கிறது. இந்த வகையில் ஆக்சிஸ் பேங்க் நான்காவது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. கனரா வங்கி (ரூ.4,733 கோடி) 30-வது இடத்தில் உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் இத்துறையில் 2.80 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு இருந்தன. எனவே அந்த மாதத்தில் முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 8.27 கோடியை எட்டியது. மே மாதத்தில் இத்துறையில் புதிதாக 5.54 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே முதலீட்டாளர் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 8.32 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
2.60 சதவீதம் அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.24.78 லட்சம் கோடியாக இருந்தது. மே மாதத்தில் அது ரூ.25.43 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஆக, இத்துறையின் சொத்து மதிப்பு 2.60 சதவீதம் அதிகரித்துள்ளது. சீரான முதலீட்டு மற்றும் பங்குசார்ந்த திட்டங்களில் முதலீடு ஈர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.
சிறிய, நடுத்தர நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் பலனாக பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
ஓரளவு பாதுகாப்பானது
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.