புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் உற்பத்தி திறன் இலக்கை எட்ட முடியும் மத்திய அமைச்சர் நம்பிக்கை
நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் உற்பத்தி திறனை, 2020-ஆம் ஆண்டுக்குள் 1,75,000 மெகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்ட முடியும் மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
நிலக்கரியை எரிக்காமல், புகை கக்காமல், சாம்பலை குவிக்காமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே பசுமை எரிசக்தி ஆகும். பாரம்பரிய முறைகளை தவிர்த்து சூரியசக்தி, காற்று, நீர் போன்ற இயற்கை ஆதாரங்கள் வாயிலாக பெறும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.
காற்று, சூரியசக்தி, நீர் போன்ற இயற்கை ஆதாரங்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த வளங்கள் தீர்ந்து போகும் அபாயமும் இல்லை. எனவே உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
2022-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசத்தி உற்பத்தி திறனை 1,75,000 மெகா வாட்டாக அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை 60,000 மெகா வாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை எட்ட முடியும் என மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்துறையில் இதுவரை 80,000 மெகா வாட் உற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது என்றும், மேலும் 24,000 மெகா வாட் திறன் நிறுவப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
சர்வதேச அளவில் நம் நாடு மூன்றாவது பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி மையமாகவும், நான்காவது முன்னணி காற்றாலை மின் உற்பத்தி சந்தையாகவும் இருக்கிறது. எனவே நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறனில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2013-14-ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தி திறனில் இத்துறை 12.92 சதவீத பங்கினைக் கொண்டிருந்தது. 2018 டிசம்பர் இறுதியில் அது 21.21 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
அன்னிய முதலீடு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.