செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 45 புள்ளிகள் முன்னேறியது
செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக விறுவிறுப்பாக இருந்தது.
மும்பை
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 45 புள்ளிகள் முன்னேறியது.
ஏற்ற, இறக்கம்
பங்கு வியாபாரம் நேற்று கடும் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தது. எனினும் எண்ணெய், எரிவாயு, ஐ.டி. மற்றும் நிதிச்சேவை துறைகளைச் சேர்ந்த பங்குகள் விலை உயர்ந்ததால் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ரூபாய் மதிப்பு ஒரு கட்டத்தில் 6 காசுகள் இறங்கியது, கச்சா எண்ணெய் விலை குறைந்தது உள்ளிட்ட சர்வதேச நிலவரங்கள் அதிக தாக்கம் ஏற்படுத்தவில்லை.
அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் ஏற்றம் கண்டன. அதில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.11 சதவீதம் உயர்ந்தது. அதே சமயம் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் 1.82 சதவீதம் குறைந்தது.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 11 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் ஓ.என்.ஜி.சி., எச்.டீ.எப்.சி., பார்தி ஏர்டெல், இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர், டெக் மகிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் யெஸ் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், சன் பார்மா, இண்டஸ் இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி உள்பட 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 129.98 புள்ளிகள் அதிகரித்து 39,816.48 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,838.49 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 39,499.19 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 1,146 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,344 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 155 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.1,638 கோடியாக குறைந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.1,652 கோடியாக இருந்தது.
நிப்டி
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 44.70 புள்ளிகள் உயர்ந்து 11,910.30 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,917.45 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,814.70 புள்ளிகளுக்கும் சென்றது.