2018-19-ஆம் நிதி ஆண்டில் எல்.ஐ.சி. பிரிமிய வருவாய் ரூ.3.37 லட்சம் கோடியாக உயர்ந்தது

2018-19-ஆம் நிதி ஆண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் ரூ.3.37 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.;

Update: 2019-07-03 11:16 GMT
ஆயுள் காப்பீட்டு துறை

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

புளூசிப் எனப்படும் நட்சத்திர நிறுவனங்களில் பங்குகளிலேயே பெரும்பாலும் அதிக முதலீடு செய்து வரும் இந்நிறுவனம் தனது பிரிமிய வருவாயில் 94 சதவீதத்தை முகவர்கள் வாயிலாகவே ஈட்டுகிறது. ஆன்லைன் மற்றும் வங்கிகள் வாயிலாக மீத வருவாய் கிடைக்கிறது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் ரூ.3.37 லட்சம் கோடியாக இருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் உயர்வாகும். அப்போது அது ரூ.3.17 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் முதல் ஆண்டு பிரிமிய வருவாய் மட்டும் 5.68 சதவீதம் அதிகரித்து ரூ.1,42,192 கோடியாக உள்ளது.

சென்ற நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.2.50 லட்சம் கோடிக்கு பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீத வளர்ச்சியாகும். அப்போது அது ரூ.1.98 லட்சம் கோடியாக இருந்தது.

இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 9 சதவீதம் அதிகரித்து ரூ.31.11 லட்சம் கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.28.45 லட்சம் கோடியாக இருந்தது.

நிறுவன முதலீட்டாளர்

எல்.ஐ.சி. நிறுவனம் பங்குகள், கடன்பத்திரங்களில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. ஏராளமான நிதி ஆதாரத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவன முதலீட்டாளராக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கு இந்நிறுவனம் பெரும் ஆதரவு அளித்து வருகிறது.

மேலும் செய்திகள்