அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பவித்ரோற்சவம்
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது.
திருமலை:
திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் பவித்ரோற்சவம் தொடங்கியது. அதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
நேற்று காலை சுப்ரபாதம் பாடி சுவாமியை துயிலெழுப்பி தோமாலை சேவை, அர்ச்சனை, அதன்பிறகு யாக சாலையில் சாஸ்திர பூர்வமாக பவித்திர பிரதிஷ்டை, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கோவில் துணை செயல் அதிகாரி கோவிந்தராஜன், உதவி செயல் அதிகாரி ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.