மண்ணின் பாடல்களால் மனம் மயக்கும் அபிராமி
எனக்கு கானா பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். ‘நாட்டுப்புறப் பாடலுடன் கானா பாடலைச் சேர்த்து பாடினால் என்ன?’ என்று தோன்றியது. அந்த யோசனையைச் செயல்படுத்திப் பார்த்தேன். நன்றாக இருந்தது.
நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதன் மூலம் தனக்கென்று ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் அபிராமி. கல்லூரி மாணவியான இவர் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள், தென் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கின்றன. புதிய முயற்சியாக நாட்டுப்புறப் பாடலுடன், கானா பாடலையும் சேர்த்து இவர் பாடுவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் பாடி நடனமாடி வெளியிட்ட ஆல்பங்கள் மூலம், வெளி நாடுகளிலும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். நாட்டுப்புறப் பாடலுக்காக அபிராமி நடத்தும் யூடியூப் சேனலை பலர் பின் தொடர்கின்றனர். அவரது பேட்டி…
உங்களைப் பற்றி?
என்னுடைய சொந்த ஊர் பரமக்குடி அருகேயுள்ள எஸ்.வி. மங்கலம். தந்தை நாகராஜன், தேவகோட்டையில் உள்ள அரசு தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிவதால் அங்கு குடியேறிவிட்டோம். நான் பிறந்தது, படித்தது எல்லாமே தேவகோட்டையில்தான். தற்போது தனியார் கல்லூரி ஒன்றில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். தாய் குடும்பத்தலைவி. பொறியியல் பட்டதாரியான சகோதரன் விஷ்வா, மேற்படிப்பைப் படித்து வருகிறார்.
நாட்டுப்புறப் பாடல்களில் ஆர்வம் வந்தது எப்படி?
முதலில் திரைப்படப் பாடல்களைத்தான் பாடிக்கொண்டிருந்தேன். ‘உனது குரலுக்கு நாட்டுப்புறப் பாடல்கள் பாடினால் நன்றாக இருக்கும்’ என்று எனது தந்தை கூறினார். அதன்பிறகு மேடைகளில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினேன். அதற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது கிராமப்புற மக்கள் மகிழ்ச்சியடைவதை என்னால் காண முடிந்தது. இதன் காரணமாக நாட்டுப்புறப் பாடல்களையே பெரும்பாலும் பாட ஆரம்பித்தேன். இப்போதுவரை அதுவே தொடர்கிறது.
நாட்டுப்புறப் பாடலுடன் கானா பாடலை இணைத்துப் பாடும் புதிய முயற்சியை மேற்கொண்டது எப்படி?
எனக்கு கானா பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். கானா பாடகர் சுதாகரை ஒரு கச்சேரியில் சந்தித்தேன். நான் பாடுவதைப் பார்த்த அவர் மிகவும் உற்சாகப்படுத்தினார். ‘நாட்டுப்புறப் பாடலுடன் கானா பாடலைச் சேர்த்து பாடினால் என்ன?’ என்று அப்போதுதான் எனக்குத் தோன்றியது. அந்த யோசனையைச் செயல்படுத்திப் பார்த்தேன். நன்றாக இருந்தது.
பிறகு கானா சுதாகர் உதவியால் சென்னையில் நடைபெற்ற கச்சேரிகளில் பங்கேற்றேன். அவர் எல்லா வகையிலும் ஆதரவாக இருந்தார். கச்சேரியில் கானாவையும், நாட்டுப்புறப் பாடலையும் சேர்த்துப் பாடும்போது மக்கள் அதை வெகுவாக வரவேற்றார்கள். அந்தப் பாடல்களை, இளைஞர்கள், பெண்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கைதட்டிக் கொண்டாடினார்கள். அதன் காரணமாக இந்த வகைப் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கிவிட்டேன்.
நீங்கள் நடனமாடி வெளியிட்ட ‘நாட்டுப்புறப் பாடல் ஆல்பம்’ தயாரித்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?
என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம், ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்பது மட்டுமே. அந்த யோசனையின் ஒரு அங்கம்தான் ஆல்பம் வெளியிட்டது. முதன்முறையாக ஆல்பம் பண்ணும்போது சிரமமாக இருந்தது. என்ன செய்ய வேண்டும்? யாரிடம் பேச வேண்டும்? என எதுவும் தெரியாது. அப்போது, அருண் என்பவர்தான் எனக்கு உதவி செய்தார். எனது தாய் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை அடகு வைத்துதான் அந்தப் பாடலைத் தயாரித்தோம். அதை வெளியிடுவதற்கு பல யூடியூப் சேனல்களிடம் உதவி கேட்டோம்.
இறுதியில் எனது பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்தோம். அந்தப் புதிய சேனலில் முதன்முதலில் பதிவேற்றம் செய்த எனது ஆல்பம் பாடல், 22 நாட்களில் பத்து லட்சம் பார்வைகளைக் கடந்தது. அப்போது நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பிறகு ஒவ்வொரு பாடலாகப் பதிவிட ஆரம்பித்தோம். சேனல் தொடங்கிய பத்தே மாதங்களில் ஒரு லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றதால், யூடியூப் நிறுவனத்தினர் ‘சில்வர் பிளே பட்டன் விருது’ அளித்தார்கள். அதன் பிறகே எனக்கு நம்பிக்கை வந்தது. ‘ஏரி நன்னாங்கு ஏரிதான்டா மாமா’ என்ற ஆல்பம் பாடல் எனக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது.
உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் பற்றி?
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் தனியார் அமைப்பின் மூலம் நடந்த நிகழ்வில் ‘சாதனையாளர் விருது’ அளித்தார்கள். கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் தமிழ்ச் சங்கம் மூலமாக, ‘சிறந்த நாட்டுப்புறப் பாடகி’ என்ற விருதை வழங்கினார்கள். பின்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் ‘கலைவளர்மணி’ என்ற விருதை வழங்கினார்கள்.
உங்களின் லட்சியம் என்ன?
திரைப்படங்களில் பாட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். எப்போதும் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் நாட்டுப்புறக் கலைக்காகவே நான் இயங்க வேண்டும்.