தீர்க்கதரிசி: சினிமா விமர்சனம்

Update: 2023-05-09 01:14 GMT

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு முகம் தெரியாத மனிதர் போன் செய்து ஒரு பெண் கொலை செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவித்து தடுக்கும்படி கோருகிறார். அதை போலீஸ் முதலில் நம்ப மறுக்கிறது. ஆனால் அவர் சொன்னதுபோல் கொலை நடந்து விடுகிறது.

அதே நபர் மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைக்காட்சிக்கும் போன் செய்து நடக்கப்போகும் வங்கி கொள்ளை, கொலை, சிலை திருட்டு, விபத்துக்கள் குறித்து தகவல் கொடுக்கிறார். போலீஸ் பரபரப்பாகி குற்றங்களை தடுக்க முயல்கிறது. அதில் சில குற்றங்கள் நடந்து விடுகின்றன.

மக்கள் அந்த மர்ம மனிதருக்கு தீர்க்கதரிசி என்று பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள். தகவல் தெரிவிக்கும் மர்ம மனிதன் யார் ? அவருக்கு நடக்கப் போகும் சம்பவங்கள் எப்படி முன்னதாகவே தெரிகிறது? அவரை போலீஸ் கண்டுபிடித்ததா? குற்றங்கள் எதனால் நடக்கின்றன என்பதற்கு விடையாக மீதி கதை..


துடிப்பான இளம் போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜ்மல். போலீசுக்கு உரிய மிடுக்கு, ஸ்டைல், கோபம் என எல்லா விதத்திலும் கேரக்டரை ரசித்து செய்து இருக்கிறார்.


அவருக்கு அடுத்த நிலையில் உள்ள போலீஸ் அதிகாரியாக வரும் துஷ்யந்த், ஜெய்வந்த் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் துப்பு துலக்கும் காட்சிகள் ஈர்க்கின்றன. கட்டுப்பாட்டு அறையின் சூப்பர்வைசராக வரும் ஸ்ரீமன் நிறுத்தி நிதானமாக தன் கேரக்டரை வெளிப்படுத்திய விதம் பிரமாதம்.


கவுரவ வேடத்தில் வரும் சத்யராஜ் படத்துக்கு பலமான கதாபாத்திரம். அவர் சிறிது நேரம் வந்தாலும் அன்பான குடும்பத்தலைவராகவும் பாசமான தந்தையாகவும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், தேவதர்ஷினி, மூணாறு ரமேஷ் ஆகியோர் அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்கள்.


துப்பறியும் காட்சிகளை இன்னும் சுவாரசியப்படுத்தி இருக்கலாம்.


ஒளிப்பதிவாளர் லட்சுமணனின் கேமரா கோணங்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை கண்முன் நிறுத்துகிறது.


பரபரப்பான போலீஸ் கதைக்கு சிறப்பாக இசையத்திருக்கிறார். பாலசுப்ரமணியன்.


இயக்குனர் பி.ஜி. மோகன், எல்.ஆர். சுந்தர பாண்டி இருவரும் வித்தியாசமான போலீஸ் கதையை திகிலுடன் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார்கள். ஆணவக் கொலைக்கு எதிரான சமூக கருத்தையும் சொல்லி கவனிக்க வைக்கின்றனர். கிளைமாக்ஸ் நிமிர வைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்