படித்து பட்டம் பெற்ற ஸ்ரீ தகுந்த வேலை கிடைக்காத காரணத்தால் பக்கவாத நோயால் பாதித்த விஞ்ஞானி வீட்டில் வேலைக்கு சேர்கிறார். அங்கு சமையல் செய்ய ஒரு பணிப்பெண்ணும் இருக்கிறார். இருவரும் நட்புடன் பழகுகிறார்கள். அவர்களுக்குள் தகாத தொடர்பு இருக்குமோ என்று கணவர் சந்தேகிக்கிறார். விஞ்ஞானிக்கு பிசியோதெரபி அளிக்க அந்த வீட்டுக்கு சாம்ஸ் வருகிறார்.
ஒரு கட்டத்தில் தனி ஆளாக வசிக்கும் விஞ்ஞானியின் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் அந்த நபர்கள் யார்? சதிகாரர்களிடமிருந்து விஞ்ஞானி தப்பினாரா? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லி உள்ளார்கள்.
அப்பாவி இளைஞராக யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார் நாயகன் ஸ்ரீ. கஷ்டப்படும்போது ஒரு முகமும், சொகுசு வாழ்க்கை வாழும் போது வேறு முகமுமாக வித்தியாசம் காண்பித்து அசத்தி உள்ளார். நாயகி வசுதா கிருஷ்ணமூர்த்தி அசாத்தியமான நடிப்பால் அசரடிக்கிறார். பஞ்சவர்ணம் என்ற கேரக்டரில் கணவனிடம் அதட்டலாக பேசுவது, சக கதாபாத்திரங்களை லாவகமாக எதிர்கொள்வது என பல இடங்களில் 'அட' போட வைக்கிறார். கவர்ச்சி விருந்தும் படைக்கிறார். இறுதியில் அவரது வில்லத்தனங்கள் அதிர வைக்கின்றன.
பிஸியோதெரபிஸ்ட்டாக வரும் சாம்ஸ் ஆங்காங்கே அள்ளி வீசும் 'பஞ்ச்' வசனங்கள் சிரிப்புக்கு உத்திரவாதம் தருகிறது. 'ஆண்டி ஹீரோ' என்று சொல்லும்போது சிரிப்பு சத்தம் கொஞ்சம் ஓவராகவே கேட்கிறது. விஞ்ஞானியாக வரும் ராம்ஜி படுத்துக்கொண்டே வெளிப்படுத்தும் 'ரியாக்ஷன்' அம்சம். வீட்டுக்குள் கிடைக்கும் சிறிய வெளிச்சத்தை வைத்தே காட்சிகளை சிறப்பாக படம்பிடித்து உள்ளார், ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்த். பின்னணி இசையில் சிபு சுகுமாரன் கவனம் பெறுகிறார். ஆரம்ப காட்சிகள் சுமாராக நகர்கின்றன. பிற்பகுதி வேகம். மிகச் சில கதாபாத்திரங்கள், ஒரு வீடு, ஒரு சுத்தியல், ஒரு துப்பாக்கி நிறைய சஸ்பென்ஸ் என காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் வினோ.