பணமதிப்பிழப்பை அரசு அறிவித்தபோது ஒரு பெண் அரசியல்வாதியும் தொழில் அதிபரும் சட்டவிரோதமாக கறுப்பு பணத்தை கொடுத்து புதிய ரூபாய் நோட்டாக மாற்றிக் கொள்கின்றனர். அதை பிரதிமா என்ற பெண் தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்து மாட்டிக் கொள்கிறார். அந்த பெண்ணையும் அவரது மகளான சிறுமியையும் அவர்கள் கொன்று விடுகிறார்கள், காதல் ஜோடிகளான அர்ஜுன் சுந்தரமும், சிந்தியாவும் பெண் செய்தியாளர் படம்பிடித்த மெமரி கார்டை வைத்து குற்றவாளிகளிடம் பேரம் பேசி லஞ்சம் பெற்று சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள். இறந்துபோன சிறுமி ஆவியாக வந்து கொலையாளிகளை பழிவாங்குவதும் துரோகம் செய்த காதல் ஜோடியை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதும் கதை.
காதல் ஜோடிகளாக வரும் அர்ஜுன் சுந்தரம், சிந்தியா இருவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களின் காதல் காட்சிகள் கதையோடு ஒட்டாமல் நிற்கிறது. இவர்கள் இருவரையும் பேயாக வரும் சிறுமி போலீசில் சிக்க வைக்கும் காட்சிகள் ஈர்க்கின்றன. பேய் சிறுமியின் நடிப்பும் கவர்கிறது. செல்போன்களால் குடும்பத்தில் நடக்கும் சீரழிவுகளை காமெடியாக சொல்லும் கஞ்சா கருப்பின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. ஆன் லைன் ஷாப்பிங், டிக்டாக் மோகத்தையும் சாடி இருக்கிறார். உதவி போலீஸ் கமிஷனராக வரும் கணேஷ்குமார் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். ஜாகுவார் தங்கம், பிரதிமா, ஜோதிராய், சுரேஷ் ஆகியோரும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
பேய் ஓவ்வொருவராக கொலை செய்யும் காட்சிகளில் திகில். பேயை வைத்து இன்னும் பயமுறுத்தி இருந்தால் கவனம் பெற்று இருக்கும்.. சட்ட விரோத பண பரிமாற்ற மோசடியை எடுத்து பேய் திகிலோடு திரைக்கதையாக்கி உள்ள இயக்குனர் முத்துக்குமார் சமூக பொறுப்பை பாராட்டலாம். ஒளிப்பதிவும் இசையும் திகில் கதைக்கு உதவி உள்ளன.