நான் மிருகமாய் மாற: சினிமா விமர்சனம்
ரவுடிக் கூட்டத்திடம் இருந்து குடும்பத்தைக் காக்க போராடும் ஒருவனின் தற்காப்பு ஆட்டங்கள்தான் ‘நான் மிருகமாய் மாற’ படம்.
சினிமா சவுண்ட் என்ஜினீயர் சசிகுமார். அம்மா, அப்பா, தம்பி, தங்கை, மனைவி, மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்கிறார். தொழில் அதிபர் ஒருவரை கொலை செய்ய கூலிப்படை துரத்துகிறது. அவரை சசிகுமாரின் தம்பி காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். இதனால் அந்த கூலிப்படை தம்பியை நடுரோட்டில் வெட்டி கொலை செய்கிறது. இதை பார்த்து கதறும் சசிகுமார் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு தண்டனை கிடைக்காது என கருதி நேரடியாக களத்தில் இறங்குகிறார். தம்பியை சாகடித்தவர்களை கொன்று சாய்க்கிறார். இதனால் கூலிப்படை தலைவனால் சசிகுமார் குடும்பத்துக்கு ஆபத்து சூழ்கிறது.
தம்பி காப்பாற்றிய தொழில் அதிபரை நீ கொல்ல வேண்டும் இல்லையேல் உனது குடும்பத்தினரை கொல்வோம் என்று மிரட்டுகிறான். தொழில் அதிபரை சசிகுமார் கொன்றாரா? குடும்பத்தினரை காப்பாற்றினாரா? கூலிப்படை தலைவன் யார்? என்பதற்கு விடையாக மீதி கதை. அமைதியான குடும்ப தலைவனாக வரும் சசிகுமாருக்கு பாசம், கோபம், தவிப்பு என்று அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்து இருக்கிறார்.
கொலைகாரர்களையும், வீட்டில் புகுந்த கூலிப்படையினரையும் வெட்டி சாய்க்கும்போது வெறித்தனம் காட்டுகிறார். சவுண்ட் என்ஜினீயர் தொழில் மூலம் வில்லன்களின் பைக் சத்தம், செல்போனில் பேசும்போது உடன் கேட்கும் ஒலி போன்றவைகளை வைத்து அவர்களை அடையாளம் காண்பது சுவாரஸ்யம். சசிகுமார் மனைவியாக வரும் ஹரிப்பிரியா கதாபாத்திரத்தில் நிறைவு. விக்ராந்த் மிரட்டல் வில்லன். அடையாளத்தை வெளிப்படுத்தாமல் செல்போனிலேயே சசிகுமாரை குலைநடுங்க வைப்பது திகில். கே.ஜி.எஸ்.வெங்கடேஷ், துளசி சோகமாய் வருகிறார்கள். இன்னொரு வில்லனாக வரும் அப்பானி சரத் பார்வையிலேயே குரூரம் காட்டுகிறார். அதீத வன்முறையை குறைத்து இருக்கலாம். வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும், அதை விறுவிறுப்பாகவும், திகிலாகவும் நகர்த்தி உள்ளார் இயக்குனர் சத்ய சிவா. ராஜா பட்டாச்சாரியாவின் கேமரா இரவு வன்முறையை திகிலாக படம் பிடித்து உள்ளது. ஜிப்ரான் பின்னணி இசையும் கதையோடு ஒன்ற வைக்கிறது.