மனிதன் எப்போது எப்படி மாமனிதன் ஆகிறான் - 'மாமனிதன்' சினிமா விமர்சனம்

எதிர்பாராத விதமாக மக்களின் பணத்தை மோசடி செய்து நில உரிமையாளர் தப்பிக்க சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. அந்த சிக்கலில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? அவரது குடும்பம் என்ன ஆனது? என்பதே மாமனிதன். ஒரு மனிதன் எப்போது, எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை யதார்த்தத்தோடு சொல்ல முயற்சித்து இருக்கிறார் டைரக்டர் சீனு ராமசாமி.

Update: 2022-06-26 10:32 GMT

ராதாகிருஷ்ணன், ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுகிற டிரைவர். தனது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு முதியவர் மகள் திருமணத்துக்காக வாங்கிய நகைகளை தவறவிட்டு விடுகிறார். ராதாகிருஷ்ணன் அந்த முதியவரை தேடிக்கண்டுபிடித்து நகைகளை ஒப்படைக்கிறார்.


நகைகளை பறிகொடுத்து விட்டார் என்று கருதி, மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள். ராதாகிருஷ்ணனே மாப்பிள்ளை ஆகிறார். 2 குழந்தைகளுக்கு தந்தை ஆகிற ராதாகிருஷ்ணன் குழந்தைகளை ஆங்கில பள்ளியில் படிக்க வைப்பதற்காக ரியல் எஸ்டேட் தரகர் ஆகிறார்.

இந்த நிலையில், அவர் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. செய்யாத குற்றத்துக்காக, மோசடி பேர்வழி என்ற பழியை அவர் சுமக்க, அவரை போலீஸ் தேடுகிறது. அதற்கு காரணமான ரியல் எஸ்டேட் அதிபரை தேடி ராதாகிருஷ்ணன் கேரளா செல்கிறார். அங்கேயே வேலை தேடிக்கொள்கிறார்.

குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார் என்று அவருடைய மனைவியும், மகனும் கருதுகிறார்கள். அந்த கெட்ட பெயர் ஒரு கட்டத்தில் நீங்குகிறது. மனைவி, குழந்தைகளுக்காக அவர் என்னென்ன தியாகங்களை செய்திருக்கிறார்? என்று தெரியவரும்போது, குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள்? ராதாகிருஷ்ணன் திரும்பி வந்தாரா, இல்லையா? என்ற கேள்விக்கு விடை மீதி கதையில் இருக்கிறது.


ராதாகிருஷ்ணனாக விஜய் சேதுபதி வாழ்ந்திருக்கிறார். அவருடைய யதார்த்தமான நடிப்பும், வசன உச்சரிப்பும், கதாபாத்திரமாகவே மாறியிருக்கும் திறமையும் பல விருதுகளை அள்ளும். ''ஆட்டோ டிரைவர்னா அவ்வளவு கேவலமா?'' என்று மைத்துனர் மீது ஆவேசப்படும்போதும், தன்னை ஏமாற்றியவரின் தாயார் என்ற வருத்தத்தை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல், அவர் கையினால் சாப்பிட்டுக்கொண்டே 10 லட்சம் ஏமாந்ததை அமைதியாக சொல்லும்போதும், ''பெற்ற தாய்க்கு இறுதிச்சடங்கை செய்யாதவன் நீ'' என்று ஏமாற்றியவனை மன்னிக்கும்போதும், விஜய் சேதுபதியின் நடிப்பும், அவருடைய கதாபாத்திரமும் கோபுரமாக உயர்ந்து நிற்கின்றன.

விஜய் சேதுபதியின் மனைவியாக காயத்ரி, கதாபாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார். டீக்கடை நடத்தும் இஸ்லாமிய நண்பர் குருசோமசுந்தரம், படத்தின் இன்னொரு சிறப்பான கதாபாத்திரம். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.


ஒரு குடும்ப கதையை மிக நேர்மையாக கையாண்டு நெகிழவைத்து இருக்கிறார், டைரக்டர் சீனுராமசாமி. கதைக்குள் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் மூலம் மத ஒற்றுமையை படம்பிடித்து காட்டியிருப்பது, சிறப்பு.

சீனு ராமசாமிபழைய படம் பார்த்த உணர்வு.

Tags:    

மேலும் செய்திகள்