அப்பா-மகள் பாசத்தை சொல்லும் படம் ‘ராஜாவுக்கு ராஜாடா’
தென்னிந்திய சினிமாவில், சிறந்த குணச்சித்திர நடிகர் என்று கொண்டாடப்படுபவர், கிஷோர்.
கதாநாயகன், வில்லன், அப்பா, அண்ணன் என எந்த கதாபாத்திரமானாலும் மிக சிறப்பாக நடித்து திறமையை வெளிப்படுத்துவார். ‘ராஜாவுக்கு ராஜாடா’ என்ற புதிய படத்தில் அற்புதமான ஒரு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
“இது, அப்பா-மகள் பாசத்தை அழகாக சொல்லும் படம். மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட ஆசை, குடும்ப உறவுகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை மையமாக கொண்டே படத்தின் கதை நகரும்” என்கிறார், டைரக்டர் திரவ். இவர், தேசிய விருதை பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் இணை இயக்குனராகவும், பாடல் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.
‘ராஜாவுக்கு ராஜாடா’ படத்தை பற்றி அவர் மேலும் கூறுகிறார்:
“உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படம், இது. அன்பு மட்டுமே உலகில் பெரியது என்பதே படத்தின் அடிநாதம். கிஷோர் அன்பான தந்தையாக-இயல்பான குடும்பத்தின் எளிய மனிதராக, ஒரு தனியார் பள்ளியின் விளையாட்டு ஆசிரியராக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், தனன்யா, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் நடிக்கிறார்கள்”.