‘டூலெட்’ படத்தில் நடித்து பாராட்டு பெற்ற சந்தோஷ் நம்பிராஜன் முழுக்க முழுக்க செல்போனில் ஒரு முழு படத்தையும் எடுத்து இருக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்துக்கு ‘அகண்டன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். அவர் கூறியதாவது:-
“செல்போனில் படமான முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது, ‘அகண்டன்.’ இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
ரோட்டில் இரவு சாப்பாட்டுக்கடை வைத்திருப்பவராக நடித்து இருக்கிறேன். அவனுக்கு ஒரு கனவு இருக்கிறது. கல்லாவில் மனைவியை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற கனவு. அந்த கனவில் இடியாக வந்து விழுகிறது, ஒரு கொலை வழக்கு. அதில் இருந்து அவன் எப்படி மீள்கிறான்? என்பது கதை.
அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட படம், இது. இதில் நான் ஒரு சீன நடிகருடன் மோதும் சண்டை காட்சி, படுபயங்கரமாக படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக ஹரிணி என்ற புதுமுகம் நடிக்க, அவருடன் 30 புதுமுகங்கள் படத்தில் இடம்பெறுகிறார்கள்.
செல்போனில் படமாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம், சினிமாவில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும்.”