என்றாவது ஒருநாள்

உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ‘என்றாவது ஒருநாள்’ சினிமா முன்னோட்டம்.

Update: 2021-03-04 10:09 GMT
உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘என்றாவது ஒருநாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி யின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகி யிருக்கிறார். தனது முதல் படம் பற்றி அவர் கூறுகிறார்:-

“உண்மை சம்பவத்தை கருவாக வைத்து வரும் கதைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நிஜ சம்பவங்களை திரைக்கதை என்னும் மாலையாக அழகாக கோர்த்து பல்வேறு இயக்குனர்கள் கதைகளை சொல்லும் விதம் அதிகமாகி வருகிறது.

நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது.

குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”.

மேலும் செய்திகள்