காலக்கூத்து

சாய் தன்ஷிகா நடிக்கும் ‘காலக்கூத்து’ சாய் தன்ஷிகா முன்னணி கதாநாயகிகள் அனைவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Update: 2017-07-04 09:38 GMT
இந்த பட்டியலில் சாய் தன்ஷிகாவும் இணைந்திருக்கிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘எங்க அம்மா ராணி,’ ‘உரு’ ஆகிய படங்கள் இதற்கு உதாரணமாக அமைந்தன.

இதையடுத்து அவர் நடித்து வரும் புதிய படம், ‘காலக்கூத்து.’ இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம்தான். இந்த படத்தை பற்றி சாய் தன்ஷிகா கூறியதாவது:-

“காலக்கூத்து படத்தில், மதுரையை சேர்ந்த பெண்ணாக, கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறேன். இதிலும் எனக்கு ஜோடி, கலையரசன்தான். ஒரு பெண் காதலில் விழுந்து விட்டால், அந்த பெண்ணை அவள் குடும்பத்தினர் எப்படி நடத்துகிறார்கள்? என்பதுதான் கதை. நாகராஜ் என்ற புதுமுக டைரக்டர் இயக்குகிறார். இவரும் மதுரையை சேர்ந்தவர்தான்.

மீரா கதிரவன் இயக்கத்தில், ‘விழித்திரு’ படத்தில் வட சென்னை குடிசைப்பகுதி பெண்ணாக நடித்து இருக்கிறேன். இதில், முதன்முதலாக நகைச்சுவை வேடம் செய்து இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். பிஜாய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ என்ற மலையாள படத்தில் கண்பார்வையற்ற பெண்ணாக நடித்து இருக்கிறேன். எனக்கு ஜோடி, துல்கர் சல்மான்.

‘கமர்சியல்’ கதாநாயகியாக நடிக்காமல், கனமான கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களே? என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பாலா, ஜனநாதன், வசந்த பாலன் ஆகிய படைப்பாளிகள் எனக்காக போட்டு தந்த பாதையில் நான் தொடர்ந்து பயணிப்பதால், இந்த நிலை உருவாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். துல்கர் சல்மானுடன் நடித்துள்ள ‘சோலோ’ படம், ‘கமர்சியல்’ படம்தான். ‘கபாலி’ படத்தில் கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்வதில், நான் கவனமாக இருக்கிறேன்” என்கிறார், சாய் தன்ஷிகா.

மேலும் செய்திகள்