ரஜினியின் உழைப்பாளி பட பாடலை இசைத்து கனடாவில் தொழிலாளர்கள் போராட்டம்
நடிகர் ரஜினிகாந்தின் உழைப்பாளி படத்தில் இடம் பெற்ற பாடலை இசைத்து கனடாவில் வீதியில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
டொராண்டோ,
நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். அவரது படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல ஆண்டுகளாக மக்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், கனடாவின் டொராண்டோ நகரில் ஆண், பெண் பேதமின்றி கூலி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது தினசரி சம்பள தொகையை உயர்த்தி தர வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக டொராண்டோ நகர தெருக்களில் போராட்டத்தில் இறங்கிய அவர்கள், அனைவரும் சமம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும், குறைந்த பட்ச கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை உயர்த்தியபடியும், நடனம் ஆடியபடியும் காணப்பட்டனர்.
அப்போது, பின்னணியில் நடிகர் ரஜினிகாந்தின் உழைப்பாளி படத்தில் இடம் பெற்ற, பாடகர் மனோ பாடிய, உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா... என்ற பாடல் இசைத்தபடி இருந்தது. அதற்கேற்ப சிலர் நடனமும் ஆடினர்.