தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம் - 'ரத்னம்' பட விவகாரத்தில் கொந்தளித்த நடிகர் விஷால்
ரத்னம் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதாக நடிகர் விஷால் தெரிவித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
இயக்குநர் ஹரியின் 17வது திரைப்படமான 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். 'தாமிரபரணி', 'பூஜை' படங்களுக்குப் பிறகு நடிகர் விஷால்- இயக்குநர் ஹரி 'ரத்னம்' படம் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஏரியாக்களில் படத்திற்கு சரியான தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்றும், பட ரிலீஸில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என்றும் நேற்று நடிகர் விஷால் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று படம் ரிலீஸான நிலையில், ஆவேசமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் விஷால். அந்த பதிவில், 'எந்த பயமும் வருத்தமும் இல்லாமல் கட்டப் பஞ்சாயத்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு அர்த்தம், இந்த ஆண்டு தமிழ் சினிமா மற்றும் அதன் தயாரிப்பாளர்கள் ரோலர்கோஸ்டர் ரைடில் உள்ளனர். திருச்சி, தஞ்சாவூர் நகரங்களின் தியேட்டர் சங்கத்தின் உறுப்பினர்கள் இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து இன்னும் நடப்பதை வெளிப்படுத்தி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். என்னை போன்ற போராளிக்கு இது பின்னடைவு. என்னதான் இது தாமதமானாலும் நீதியின் மூலம் உங்களை வீழ்த்துவேன். காரணம் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம், வாழ்வாதாரம் இருக்கிறது. திரைப்படம் வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல!
இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன காரணத்திற்காக இந்த தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது என்ற காரணம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். நிச்சயம் இது உங்கள் அனைவருக்கும் அவமானம். இதை நான் ஒரு நடிகனாகவோ, நடிகர் சங்க பொதுச்செயலாளராகவோ, தயாரிப்பாளராகவோ சொல்லவில்லை. தன்னுடைய படைப்பை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தவிப்பு கொண்ட ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக சொல்கிறேன்' என கூறியுள்ளார்.