பாலியல் புகாரில் சிக்கிய சித்திக்கை கட்டிப்பிடித்து அழுதது ஏன்? - நடிகை பீனா விளக்கம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகர் சித்திக்கை கட்டிப்பிடித்து அழுத வீடியோ தவறான கண்ணோட்டத்தில் பரப்பப்படுவதாக நடிகை பீனா ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-08-31 14:47 GMT

பிரபல மலையாள நடிகரான சித்திக் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச்செயலாளராக இருந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின் மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது மலையாள திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியது. கடந்த 2016ம் ஆண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் அன்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதே ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை சித்திக் ராஜினாமா செய்தார். புகாரின் பேரில் தற்போது சித்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சித்திக்கிற்கு அம்மா நடிகர் சங்கத்தில் பிரிவு உபச்சார விழா நடந்ததாகவும், அப்போது நடிகை பீனா ஆண்டனி அவரைக் கட்டிப்பிடித்து அழுதது போன்றும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.

இதைப் பார்த்த பலரும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சித்திக்கிற்கு நடிகை பீனா கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவிப்பதாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பீனா தற்போது அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பீனா ஆண்டனி பேசுகையில், "நடிகர் சித்திக்கின் மகன் ஷாபியை எனக்கு சிறு வயதிலிருந்து நன்றாகத் தெரியும். அவர் திடீரென இறந்து போனதால் அந்த சமயத்தில் என்னால் ஆறுதல் தெரிவிக்க சித்திக் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. அப்போது எனக்கு காய்ச்சலாக இருந்ததால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. பின்னர் அவரை அம்மா பொதுக்குழுக் கூட்டத்தின் போது சந்தித்தேன். அந்த சமயத்தில் அவரைக் கட்டிப்பிடித்து எனது வருத்தத்தைத் தெரிவித்தேன். நான் மட்டுமல்ல அங்கு வந்திருந்த ஏராளமானோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்" என தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், தன்னை ஒரு சகோதரி போலத்தான் எப்போதும் சித்திக் நடத்துவார் என்றும், இந்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி தன்னை தவறாக விமர்சனம் செய்வதாகவும் கூறியுள்ளார். எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரித்த பின்னரே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தவறான பரப்புரை தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்