வயதான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? சுருதிஹாசன் விளக்கம்
வயதான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? என்று நடிகை சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.;
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது வலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. பட வாய்ப்பு இல்லாமல் நடிக்கிறாரா? அல்லது அதிக சம்பளம் கிடைப்பதால் நடிக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்புகின்றனர். பாலகிருஷ்ணா ஜோடியாக வீரசிம்மா ரெட்டி படத்திலும், சிரஞ்சீவி ஜோடியாக வால்டர் வீரய்யா படத்திலும் சுருதிஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன. சுருதிஹாசனிடம் வயதான நடிகர்களுடன் நடிப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுருதிஹாசன் பதில் அளித்து கூறும்போது, ''நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம். இதை ஏற்கனவே பல வயதான ஹீரோக்கள் தங்களைவிட இரண்டு மடங்கு வயது குறைவான இளம் கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு நான் ஒன்றும் விதி விலக்கு அல்ல'' என்றார்.