காதல் தம்பதிக்கு வரவேற்பு

Update: 2023-05-04 05:20 GMT

சென்ட்ரல் டாக்கீஸ் திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்ட படம், பைத்தியக்காரன். அந்தப் படம் 26-9-1947-ல் வெளிவந்தது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்து மீண்டு வந்த, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த படம் என்பதால் அதற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

என்.எஸ்.கே. நாடகக் குழுவினர், அதை மேடை நாடகமாக நடித்து வந்தனர். கலைவாணர் சிறையில் இருந்தபோது நாடகக் குழுவினருக்கு வருமானம் இல்லை. அவர்களுக்கு உதவுவதற்காக, டி.ஏ.மதுரத்திடம் பைத்தியக்காரனை திரைப்படமாக்கும்படி என்.எஸ்.கே. கேட்டுக் கொண்டார். படம் எடுத்து முடியும் தருவாயில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அந்தப் படத்தில் அவருக்காக காட்சிகள் உருவாக்கப்பட்டு அவரும் நடித்தார். சிறை அனுபவங்களை தனது நடிப்பிலும், பாட்டிலும் வெளிப்படுத்தினார்.

பைத்தியக்காரனாக பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடித்திருந்தார். தன்னுடைய விதவைத் தங்கைக்கு மறுமணம் செய்துவைக்க போராடும் அவர், இறுதியில் பைத்தியக்காரனாகி மரணத்தை தழுவுவதே கதை!

இந்தப் படத்தின் மூலமே இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு அறிமுகமானார்கள்.

டி.ஏ.மதுரத்திற்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் எம்.ஜி.ஆரின் ஜோடி. இன்னொருவர் என்.எஸ்.கே.யின் ஜோடி.

என்.எஸ்.கே. அல்லாமல் இன்னொருவருடன் டி.ஏ.மதுரம் இணைந்து நடித்தது இந்தப் படத்தில் மட்டுமே.

என்.எஸ்.கேயும், டி.ஏ.மதுரமும் கணவன் மனைவியானதில் ஒரு ருசிகரம் உண்டு.

ஒருமுறை வசந்தசேனா படப்பிடிப்புக்கு அவர்கள் இருவரும் படக் குழுவுடன் புனே நகருக்குப் புறப்பட்டுப் போனார்கள். ஒரு சின்னத் தகராறில் படத்தின் புரடக்ஷன் மேலாளர்கள் படக்குழுவுடன் செல்லாமல் ரெயிலை தவறவிட்டனர். இதனால் சாப்பாட்டுச் செலவுக்கு பணம் இல்லாமல் படக் குழுவினர் தவித்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன் தன்னிடம் இருந்த பணத்தை செலவு செய்து அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். மதுரம் அணிந்திருந்த நகைகளை வாங்கி விற்று படக் குழுவினருக்கு உதவினார்.

பிறருக்கு உதவும் என்.எஸ்.கேயின் தயாளக் குணம் மதுரத்துக்கு மிகவும் பிடித்தது. ஒரு கட்டத்தில் மதுரத்தை திருமணம் செய்து கொள்ள என்.எஸ்.கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தபோது, அவரும் சம்மதித்தார். பிறகு என்ன?டும்...டும்...தான்! படப்பிடிப்பு தளத்திலேயே வசந்தசேனா படத்தின் இயக்குனர் ராஜா சாண்டோ முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் தம்பதிக்கு திருச்சியில் நாடகக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் மற்றும் நாடக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்