விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-08 13:32 GMT

சென்னை,

நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் கேட்டிருந்தார். இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமை லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

   இந்த நிலையில், பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது. இதையடுத்து தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

  வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைஎதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது.இதையடுத்து, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுகளை   அமல்படுத்தால் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக  இருந்த விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விஷாலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்