இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...!

'லியோ' படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Update: 2024-01-03 08:06 GMT

மதுரை, 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம்  உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்றும், வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் படங்களில் சட்ட விரோத செயல்கள், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது போன்ற காட்சிகள் மூலம் தவறாக வழிகாட்டுகின்றார். வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் எடுக்கிறார். இதனை தணிக்கை குழுவினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் லோகேஷ் கனகராஜுக்கு முறையான உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற வன்முறையை தூண்டும் காட்சிகளை எடுப்பதற்காக அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றவியல் வழக்கு தொடர வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்