விக்ரமின் தங்கலான் திரைப்படம் ஜூனில் வெளியீடு
விக்ரமின் தங்கலான் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
தங்கலான் படத்தை ஜூன் 13-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் தங்கலான் திரைப்படத்தை ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். நீண்ட நாள்களாக படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டே வருவதால் இம்முறை திட்டமிட்ட தேதிக்கு வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது