புரோமோஷனுக்காக ரெயிலில் ஒட்டப்பட்ட 'வாரிசு' பட போஸ்டர்கள் சேதம்!

வாரிசு படத்தின் புரோமோஷனுக்காக ரெயிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Update: 2022-12-29 05:29 GMT

சென்னை

2023 பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இருவாரங்களே உள்ள நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அதற்கு காரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் - அஜித் படங்கள் நேரடியாக மோதுவதால் ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார். இதேபோல் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். தமன் வாரிசு படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

வாரிசு படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், புரோமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. சென்னை - கொல்லம் செல்லும் அனந்தபுரி ரெயில், சென்னை மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் வாரிசு படத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இதுதொடர்பான வீடியோக்களையும் வைரலாக பரப்பினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அனந்தபுரி ரெயிலில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் ஸ்டிக்கர் பற்றிய வீடியோ செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அதனை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வாரிசு படக்குழு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்