டி.வி. நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை - நடிகை குட்டி பத்மினி

பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை என்று நடிகை குட்டி பத்மினி குற்றச்சாட்டியுள்ளார்.;

Update:2024-08-31 17:54 IST

சென்னை,

ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

மலையாளத் திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ள ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை குட்டி பத்மினி கருத்து தெரிவித்துள்ளார்.

' மலையாள பட உலகில் நடந்துள்ள விஷயங்கள் குறித்து நான் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறேன். அது உண்மைதான். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் தொலைக்காட்சி தொடர்களில நடிக்கும் நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். டி.வி. நடிகைகளை ஒப்பந்தம் செய்யும்போது நீங்கள் யாருக்கும் கீழ்பணிய வேண்டாம். ஏதேனும் பிரச்சனை வந்தால் எனக்கு போன் செய்யுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறேன்.

இந்த துறையில் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர். ஆண்கள் மீது குற்றம் சொல்லும் அதே வேளையில் பெண்களையும் குற்றம் சொல்லுவேன். நீங்கள் எதற்காக அதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். முடியாது என்று சொல்ல வேண்டும். சில நேரம் மறுக்கும் நடிகைகளை ஒதுக்கி விடும் நிலைமையும் இருக்கிறது.

பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.சின்மயிக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தேன். ஆனால் அவரை நடிகர் ராதாரவி சங்கத்தில் இருந்து நீக்கினார். ஸ்ரீரெட்டிக்கு உறுப்பினர் அட்டைகூட கொடுக்கப்படவில்லை. இதனால் அவரால் சீரியல்களில் நடிக்க முடியாத நிலை உள்ளது.

பாலியல் சீண்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடிக்கும் இடத்தில் நீ ஒப்புக்கொண்டால்தான் வேலை கொடுப்பேன் என்று சொல்வது தவறு. தயாரிப்பு மானேஜர் உள்ளிட்ட சிலரும் பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். போக்சோ சட்டம் மாதிரி வரவேண்டும்.

நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன். அது வெளியாகும்போது பல பெரிய நடிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். 95 சதவீதம் பெண்களை பயன்படுத்தி விட்டு வேலை கொடுப்பது இல்லை. எனக்கும் நடந்து இருக்கிறது.

எனக்கு 10 வயதாகும்போது பெரிய நிறுவனத்தில் ஒருவர் தவறாக நடந்தார். என் அம்மா தட்டி கேட்டதும் என்னை படத்திலிருந்து வெளியேற்றி விட்டனர். சினிமாவில் மட்டுமன்றி சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்' என்று குட்டி பத்மினி கூறியுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்