சினிமாவில் கதை எழுத ஆள் இல்லை - டைரக்டர் தங்கர்பச்சான்
இப்போது சினிமாவில் கதை எழுத ஆள் இல்லை என்றார் டைரக்டர் தங்கர்பச்சான்.;
தமிழில் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை டைரக்டு செய்தவர் தங்கர்பச்சான். நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். தற்போது பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிக்க கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்தப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் தங்கர்பச்சான் அளித்துள்ள பேட்டியில், "வெற்றி பெற்ற அழகி படத்தின் 2-ம் பாகம் எடுப்பீர்களா என்று கேட்கிறார்கள். 2-ம் பாகம், 3-ம் பாகம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. கதை கிடைக்காத நிலையில் 2-ம் பாகம் என்று சொல்கின்றனர். என்னால் அதை செய்யமுடியாது.
பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பது தேவையில்லை. கதைதான் முக்கியம். கதை இல்லாமல் அதிக செலவில் புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படங்கள் எடுத்து பலன் இல்லை. கண்டிப்பாக கதை இருக்கவேண்டும்.
கதை இருந்தால்தான் ரசிகர்களுக்கும், சினிமாவுக்கும் இணைப்பு இருக்கும். முன்பெல்லாம் கதை எழுத அதிகம் பேர் இருந்தனர். ஆனால் இப்போது சினிமாவில் கதை எழுத ஆள் இல்லை'' என்றார்.