விஜய்தேவரகொண்டா படத்துக்கு நஷ்டஈடு கேட்டு போராடிய தியேட்டர் அதிபர்கள்
லைகர் படத்துக்கு நஷ்டஈடு கேட்டு தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.;
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இதில் அவர் குத்துச்சண்டை வீரராக வந்தார். விஜய்தேவரகொண்டாவுடன் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்து இருந்தார். அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த வருடம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. ரூ.125 கோடி செலவில் தயாரான லைகர் ரூ.55 கோடியை மட்டுமே வசூலித்தாக கூறப்படுகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படத்தினால் விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் பெரிய நஷ்டம் அடைந்தனர். தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் லைகர் படத்துக்கு நஷ்டஈடு கேட்டு தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் கூறும்போது "லைகர் படத்துக்கான நஷ்டத்தை ஈடுகட்டும்படி தயாரிப்பாளர்களிடம் கேட்டோம். ஆறு மாதத்தில் நஷ்டத்தை ஈடு செய்வதாக பூரி ஜெகன்னாத் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை'' என்றனர்.