இணையத்தில் கசிந்த சிவகார்த்திகேயன் பட காட்சி... படக்குழு அதிர்ச்சி...!
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்.கே - 21' படத்தின் காட்சி இணையத்தில் கசிந்துள்ளது.;
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். முதல் முறையாக, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. குழந்தையுடன் நடிகை சாய் பல்லவி இடம் பெற்றிருக்கும் அந்த காட்சியை படக்குழு இணையத்தில் இருந்து தற்போது நீக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அந்த காட்சியை யாரும் பகிர வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.