'சர்தார்' படத்தின் 2-ம் பாகம் உருவாகும் -நடிகர் கார்த்தி
‘சர்தார்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என நடிகர் கார்த்தி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் சர்தார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல வசூலும் பார்த்துள்ளது. இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் ராணுவ உளவாளியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக ராஷிகன்னா நடித்துள்ளார். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வந்த விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் 3-வது படத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதனால் சர்தார் 2-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில், ''சர்தார் படம் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் 2-ம் பாகம் எடுக்குபடி ரசிகர்கள் வேண்டினர். எனவே சர்தார் 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார். இது கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.