'தமிழ் சினிமாவிற்கு அது தேவையில்லை' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பெண்கள் பாதுகாப்புதான் முதலில் முக்கியம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.;

Update:2024-09-15 16:09 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து, காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது இவர், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஏ.ஆர்.எம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 12-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹேமா கமிட்டி மற்றும் நடிகைகள் அளிக்கும் பாலியல் புகார் பற்றி  பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'எனக்கு அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. எப்பொழுதுமே அது நடக்க கூடாது என்றுதான் நாம் நினைப்போம். தமிழ் சினிமாவில் அப்படி ஒரு விஷயம் இதுவரை நடக்கவில்லை என நினைக்கிறேன். அதனால், இப்போதுவரை ஹேமா கமிட்டி போன்று ஒன்று தேவைப்படவில்லை. அப்படி எதாவது நடந்தால் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் . அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புதான் முதலில் முக்கியம்,' என்றார்.

நாட்டையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து பல நடிகைகள், நடிகர்கள், டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்