சூர்யவம்சம் படம் 2-ம் பாகம் வரும் - நடிகர் சரத்குமார்

Update: 2023-05-02 01:20 GMT

சரத்குமார் நடித்து சமீபத்தில் ருத்ரன், பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. தற்போது அதிக படங்கள் கைவம் வைத்து பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், நான் 40 வருடங்களாக கலை உலகத்தில் பயணிக்கிறேன். கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து இருக்கிறேன். தற்போது மற்ற இளம் கதாநாயகர்களுடனும் இணைந்து நடிக்கிறேன். வாரிசு, பொன்னியின் செல்வன் படங்களில் நல்ல வேடங்கள் அமைந்தன. ருத்ரன் படத்தில் நடித்த வில்லன் வேடத்துக்கும் பாராட்டு கிடைத்தது. பிறமொழி படங்களிலும் நடிக்கிறேன்.

அனைத்து மொழி படங்களிலும் எனது சொந்தகுரலில் டப்பிங் பேசி உள்ளேன். இதுவரை 145 படங்களில் நடித்து விட்டேன். தற்போது 24 படங்கள் கைவசம் உள்ளன. 150-வது படமாக ஸ்மைல்மேன் தயாராகிறது. நான் பல சோதனைகளை கடந்து வந்து இருக்கிறேன். மனதில் வலிகள் உள்ளன.

நான் நடித்து வெற்றி பெற்ற சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. சூரியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் யோசனை உள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது நிறைவாக இருந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் என்னை பற்றி நந்தினி பேசும் வசனம் மூலம் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் வெளிப்பட்டு உள்ளது. சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்